அறிவியல் உலகில் ஆயிரம் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அதைக் கண்டுகொள்ளாத இன்னும் ஒருசிலர் ஆதிகால வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். அதிலும் இன்னும் சிலர், தங்களது பிற்போக்குத் தனமான மதக் கோட்பாடுகள், சடங்குகளைவிட்டு வெளியே வருவதே இல்லை. அதை நாம் எப்போதும் தவறு சொல்வதில்லை. அதேநேரத்தில், பகுத்தறிவு சிந்தனை இல்லாத சடங்களை, மூடநம்பிக்கைகளை நாம் முழுமையாக நம்பி அதைப் பின்பற்றினால் மோசமான விளைவுகளே ஏற்படும். அப்படியான ஒரு சம்பவம்தான் சத்தீஸ்கரில் ஒருவருக்கு நிகழ்ந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் உள்ள சிந்த்கலோ கிராமத்தைச் சேர்ந்தவர், ஆனந்த் யாதவ் (35). இவர் திருமணமாகி மனைவியுடன் வசித்துவருகிறார். என்றாலும் இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் மருத்துவ ரீதியாக பல முயற்சிகளை மேற்கொண்டபோதும் அது பலனிக்கவில்லை. இந்த நிலையில், சம்பவத்தன்று குளித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஆனந்த் யாதவ், திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆனந்த் யாதவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது இறந்த ஆனந்த் யாதவின் தொண்டைப்பகுதியில் உயிருடன் கோழிக்குஞ்சு இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த கோழிக்குஞ்சுதான் அவரது இறப்புக்கு காரணம் என்பதும் தெரியவந்தது. அதாவது ஆனந்த் யாதவ் தொண்டையில் சுவாசக்குழாய் மற்றும் உணவுப்பாதையை கோழிக்குஞ்சு அடைத்துள்ளது. இதனால் மூச்சுவிட முடியாமல் ஆனந்த் யாதவ் இறந்திருக்கலாம் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட டாக்டர் சாந்து பாக், ”நான் இதுவரை 15 ஆயிரம் உடற்கூராய்வு செய்துள்ளேன். ஆனால் இப்போதுதான் இதுபோன்ற விசித்திரமான சம்பவத்தைப் பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
யாதவின் மரணத்தைச் சுற்றியுள்ள அசாதாரண சூழ்நிலைகள், அமானுஷ்ய நடைமுறைகளுடன் தொடர்புடையது என்று கிராம மக்கள் கூறியதை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையாகும் ஆசையில், அவர் மந்திரவாதி சொன்ன சடங்கின் ஒரு பகுதியாக கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்கியிருக்கலாம் என கிராம மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.