மின்னல் pt web
இந்தியா

48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழப்பு.. பீகாரில் தொடரும் சோகம்

பீகாரில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

PT digital Desk

வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஜூன் 1 முதல் ஜூலை 16 வரை, இந்தியாவில் 331.9 மிமீ மழை பெய்துள்ளது. இது இந்த காலகட்டத்தில் வழக்கமாக பெய்யும் 304.2 மிமீ மழையை விட சுமார் 9% அதிகம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. ஆனால், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை இல்லாமல் சில மாநிலங்களில் அதிகமான மழையும் சில இடங்களில் குறைவான மழையும் பெய்திருக்கிறது.

கிட்டத்தட்ட கிழக்கிந்திய மாநிலமான பீகாரிலும் அதேநிலைதான் நீடிக்கிறது. குறிப்பாக, கடந்த புதன் மற்றும் வியாழன் என இரு தினங்களில் பீகாரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கடந்த மூன்று நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த மழையுடன் 30/40 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கைமூரில் உள்ள பகவான்பூரில் 160மிமீ மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், அம்மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் திறந்தவெளியில் வேலை செய்யும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மாநில அரசு அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.