சீனாவில் சிக்கித் தவித்த இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
சீனாவில் ஏற்பட்டுள்ள கொரனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பெரிய அச்சம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை சீனாவில் நூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே சீனாவில் இருந்து தாயகம் திரும்பும் பிறநாட்டு பயணிகள் அனைவரும் உச்சகட்ட உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதாவது பயணிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கொரனா பாதிப்பு இல்லை என உறுதிசெய்யப்பட்ட பின்புதான் அவர்கள் இயல்புநிலையில் நடமாட அனுமதிக்கப்பட்டுகின்றனர்.
இந்நிலையில் கொரனா பாதிப்பு அதிகம் உள்ள சீனாவின் வுஹான் மாகாணத்தில் சிக்கித் தவித்த இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். சீனாவில்சிக்கித்தவித்த இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இன்று டெல்லி விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. அழைத்து வரப்பட்ட 324 பேரையும் 14 நாட்களுக்கு முகாமில் வைத்து கண்காணிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் இதுவரையில் கொரனா வைரஸின் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றும் மக்கள் பீதியோ, அச்சம் அடையவோ தேவையில்லை என்றும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.