இந்தியா

உணவுப் பதப்படுத்துதல்: தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் ரூ.320 கோடியில் புதிய திட்டங்கள்!

sharpana

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் உணவுப் பதப்படுத்துதல் துறையில் திறனை மேம்படுத்துவதற்காக ரூ.320 கோடி செலவில் புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் கீழான உணவு பதப்படுத்துதல் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல் / விரிவாக்கம் செய்தல் (சி.இ.எஃப்.பி.பி.சி) என்னும் திட்டத்தின் கீழ் ரூ.107.42 கோடி மானியத்துடன், ரூ.320.33 கோடி செலவில் 28 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்கிறது மத்திய அரசு.

உணவு பதப்படுத்துதல் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல் / விரிவாக்கம் செய்தல் திட்டம் மற்றும் பிரதமரின் கிரிஷி சிஞ்சயி யோஜனா ஆகியவற்றின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நோக்கத்துடன் காணொலி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தத் திட்டங்களின் மூலம் தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, உத்தராகண்ட், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 1237 மெட்ரிக் டன் அளவில் பதப்படுத்துதல் திறன்கள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.