குஜராத் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுமார் 60 பேரை ஏற்றிக் கொண்டு ராஜ்காட்-பாவ்நகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, பாலம் ஒன்றில் நிலை தடுமாறி தண்ணீர் இல்லாத கால்வாயில் விழுந்து இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பெண்கள் 5 குழந்தைகள் உட்பட 31 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அனிடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போடட் மாவட்டத்தில் நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக மாவட்ட போலீஸ் அதிகாரி சயத் தெரிவித்தார். மேலும், பாலத்தில் லாரி சென்ற போது ஓட்டுநர் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சித்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார்.
விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.