மகாராஷ்ட்ரா
மகாராஷ்ட்ரா pt web
இந்தியா

அதிகரிக்கும் உயிரிழப்புகள்... மகாராஷ்ட்ரா அரசு மருத்துவமனையில் 16 குழந்தைகள் உட்பட 31 பேர் மரணம்!

Angeshwar G

கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆகஸ்ட் 12 முதல் 13 வரையிலான 24 மணி நேரத்திற்குள் மும்பைக்கு அருகில் உள்ள தானே பகுதியில், சத்ரபதி சிவாஜி மகராஜ் மருத்துவமனையில் (அரசு பொது மருத்துவம) உரிய வசதிகள் இல்லாததால் 18 பேர் இறந்தனர். அதன் பின் அரசு தரப்பில், “அனைத்து பொது மருத்துவமனைகளிலும் பொது மக்களுக்கு தேவையான மற்றும் அவசியமான மருந்துகள் விரைந்து வைக்கப்படும். போதிய மருத்துவர்களும் உடனடியாக பணியமர்த்தப்படுவர்” என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதேபோல மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாந்தேட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மட்டும் 12 பச்சிளம் குழந்தைகள் உட்பட 24 பேர் உரிய வசதியின்மையால் உயிரிழந்திருந்தனர். இவர்களில் 12 பேர் பாம்புக் கடிக்கு சிகிச்சைபெற வந்தவர்கள். உயிரிழந்த குழந்தைகளில் சில குழந்தைகள் மேல் சிகிச்சிக்காக தனியார் மருத்துவமனைகளால் பரிந்துரைக்கப்பட்ட குழந்தைகள்.

இந்த மருத்துவமனையை சுற்றிலும் சுமார் 70 முதல் 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு, வேறு எங்கும் பாம்புக் கடிக்கு உடனடியாக அவசர சிகிச்சை கொடுக்கும்படியான எவ்விதமான ஏற்பாடுகளும் இல்லை என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பலர் உரிய நேரத்தில் சிகிச்சையே கிடைக்காமல் இறக்கின்றனர் என சொல்லப்படுகிறது.

மகாராஷ்ட்ரா

மேலும் இந்த ஒரேயொரு மருத்துவமனையில் மட்டும்தான் பாம்புக்கடிக்கான குறைந்தபட்ச சிகிச்சைக்காவது இருக்கிறது என்பதால், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே சிலரது உயிர் பிரிந்துவிடுவதாகவும் சொல்லப்படுகிறது.

இதேபோல பச்சிளம் குழந்தைகளுக்காக வாங்கப்படும் சில உபகரணங்கள் சரியாக பராமரிக்கப்படாததும் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணாமாக அமைந்துள்ளது.

24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அதில் 16 பேர் பச்சிளம் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்புகள் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், “ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசாங்கம் மருத்துவ ஊழியர்களுக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். மேலும் நாந்தெட் மருத்துவமனைக்கும் முன்னுரிமை அடிப்படையில் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.