இந்தியா

"உத்தரபிரதேசத்தில் ஒரு கே.ஜி.எஃப்" 3000 டன் தங்க படிமங்கள் கண்டுபிடிப்பு !

jagadeesh

உத்தரபிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சோன்பகதி, ஹார்தி கிராமங்களில் 3 ஆயிரம் டன் தங்கம் வெட்டி எடுக்கிற வாய்ப்புகளை கொண்ட தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இந்தியாவின் புவியியல் ஆய்வு மையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் வெட்டி எடுப்பதற்காக வயல்களை ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கையில் உத்தரபிரதேச மாநில அரசு இறங்கி உள்ளது. இந்த தங்க சுரங்க ஒதுக்கீடு, இணையதளம் வாயிலான இ-டெண்டர் ஏலம் மூலம் நடைபெறும். இதற்காக 7 உறுப்பினர்களை கொண்ட குழுவை அந்த மாநில அரசு அமைத்து இருக்கிறது.

இது குறித்து தெரிவித்துள்ள மாவட்ட சுரங்க அதிகாரி கே.கே.ராய், "இந்தியாவின் புவியியல் ஆய்வு மையம் (ஜி.எஸ்.ஐ) உத்தரபிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் சுமார் 3,000 டன் தங்க படிமங்கள் கொண்ட சுரங்கங்களை கண்டுபிடித்துள்ளது. தற்போது, இந்தியா வைத்திருக்கும் மொத்த தங்க இருப்பை விட இது ஐந்து மடங்காகும். சோன்பத்ரா தங்க படிமங்கள் தொடர்பான ஆய்வுப் பணிகள் 1992-93 ஆம் ஆண்டுகளில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் தொடங்கப்பட்டது. இப்போது இ-டெண்டரிங் மூலம் கண்டெடுக்கப்பட்ட தங்கங்கள் விரைவில் ஏலம்விடப்படும்" என்று கூறியுள்ளார்.

மேலும், சோன் பகாடியில் வைப்பு 2,943.26 டன் என மதிப்பிடப்பட்டுள்ளது, ஹார்டியில் 646.16 கிலோகிராம். தங்கத்தைத் தவிர, வேறு சில தாதுக்களும் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நமது நாட்டில் ஏற்கெனவே உள்ள சுரங்கங்களில் தங்க இருப்பு 626 டன் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது. இதேப் போன்று 5 மடங்கு தங்க இருப்பு இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்கங்களில் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

சோன்பத்ரா மாவட்டத்தில் தங்க படிமங்களை கண்டறியும் செயல்முறையை முதன்முதலில் ஆங்கிலேய அரசாங்கம் தொடங்கியதாக கூறப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமாக உள்ள சோன்பத்ரா, மேற்கில் மத்தியப் பிரதேசம், தெற்கே சத்தீஸ்கர், தென்கிழக்கில் ஜார்கண்ட், கிழக்கில் பீகார் ஆகிய நான்கு மாநிலங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.