ஆபரேஷன் சிந்தூர் எக்ஸ் தளம்
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் | தாக்குதலில் சாதித்த 3,000 அக்னிவீரர்கள்!

இளமையும் துணிவும் சேர்ந்தால் வெற்றியாக மாறும் என்பது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தெரிகிறது. ஆம், சுமார் 20 வயது மட்டுமே நிரம்பிய அக்னிவீரர்கள், நவீன மற்றும் அதிமுக்கிய வான் பாதுகாப்பு கருவிகளை இயக்கி நாட்டை பாதுகாத்துள்ளனர்.

PT WEB

இளமையும் துணிவும் சேர்ந்தால் வெற்றியாக மாறும் என்பது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தெரிகிறது. ஆம், சுமார் 20 வயது மட்டுமே நிரம்பிய அக்னிவீரர்கள், நவீன மற்றும் அதிமுக்கிய வான் பாதுகாப்பு கருவிகளை இயக்கி நாட்டை பாதுகாத்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை கடந்த 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், பாகிஸ்தானின் பல்வேறு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டு, வலுவான பாதுகாப்பை இந்தியா நிலைநாட்டியது. இந்தியாவின் பல அடுக்குகளான வான்வழி பாதுகாப்பு அமைப்பு, குறிப்பாக ஆகாஷ்தீர் (AKASHTEER) என்ற புதிய கட்டுப்பாட்டு மற்றும் உத்தரவிடும் அமைப்பு, இந்த தாக்குதல்களை முறியடிக்க முக்கிய பங்கு வகித்தது. இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை தவிடுபொடியாக்கியதில் அக்னிவீரர்கள் தீரத்துடன் செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் - இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட 3ஆயிரம் வீரர்கள், முக்கியமான ஆயதங்கள் மற்றும் அமைப்புகளை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்தனர். அவர்கள் தோள்பட்டையில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், எல்-70 மற்றும் ZU-23-2B போன்ற துப்பாக்கிகள், PECHORA, SCHILKA, OSA-AK, STRELA, TUNGUSKA மற்றும் நடுத்தர தூர ஏவுகணை அமைப்புகள் போன்றவற்றை இயக்கி, எதிரியின் இலக்குகளை அழித்தனர். அத்துடன், ஆகாஷ்தீர் (AKASHTEER) அமைப்பின் மூலம் பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கண்டறிந்து அவற்றை அழிக்க நடவடிக்கை எடுத்தனர். இந்தியாவின் முப்படைகளில் அக்னிபாத் திட்டம் 2022 ஜுன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, 17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை நான்கு ஆண்டுகளுக்கான சேவைக்காக சேர்க்கிறது. இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட அக்னிவீரர்களுக்கு முதல் ஆண்டில் 4 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் முதல் நான்காவது ஆண்டில் 6 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. சேவையின் முடிவில் அவர்கள் 11 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் சேவை நிதியாக பெறுகின்றனர். அக்னிபாத் எனும் நெருப்புப் பாதையில் நடந்த இளம் வீரர்களின் தடங்கள், நாட்டின் பாதுகாப்பு வரலாற்றை மறுபடியும் எழுதியிருக்கிறது.