இந்தியா

அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் - பஞ்சாப் அரசு

ச. முத்துகிருஷ்ணன்

ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதியின்படி ஜூலை 1 முதல் பஞ்சாபில் அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை பின்னுக்குத் தள்ளி முதல்முறையாக ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் சார்பில் பகவந்த் மான் முதல் அமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்தது.

இதை கொண்டாடும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் பிரிவு தலைவரும் முதல் அமைச்சருமான பகவந்த் மான் ஆகியோர் லூதியானாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத்  தேர்தலின்போது, ஆம் ஆத்மி அறிவித்த வாக்குறுதிகள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.

தற்போது பகவந்த் சிங் மான் தலைமையில் அமைந்திருக்கும் பஞ்சாப் அரசு, வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. முதலில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் அறிமுகம் செய்தார். அதன் தொடர்ச்சியாக வீட்டு உபயோகத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என முதல்வர் பகவந்த் சிங் மான் அறிவித்துள்ளார். வீடுகளில் 300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் மட்டுமே இனி கட்டணம் செலுத்த வேண்டும். ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் டெல்லியில் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன் பஞ்சாபின் நுகர்வோர் நாட்டிலேயே அதிக விலை கொண்ட மின்சாரத்தைப் பெற்று வந்தனர். இந்த 300 யூனிட் இலவச மின்சாரத்தின் மூலம் பஞ்சாபில் 84% நுகர்வோர் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 73.80 லட்சம் நுகர்வோரில், கிட்டத்தட்ட 62.25 லட்சம் பேர் இதன் மூலம் பயனடைவார்கள். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.5,500 கோடியை செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.