இந்தியா

உ.பி.யில் பயங்கரம்: 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை!

உ.பி.யில் பயங்கரம்: 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை!

JustinDurai

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் மூன்று சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. இந்த குடும்பத்தை சேர்ந்த 3 வயது சிறுமி கடந்த புதன் கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறுமியை தேடி வந்த பெற்றோர்கள் சிறுமி கிடைக்காததால் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், கிராமத்திற்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கரும்பு வயலில் சிறுமி உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து சிறுமியின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதே கிராமத்தில் வசிக்கும் லெக்ராம் என்ற நபர் காரணமாக இருக்கலாம் எனக் கூறி அவரை தேடி வருகின்றனர்.

லக்கிம்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 20 நாட்களில் இது மூன்றாவது சம்பவம் ஆகும். இதற்கு முன்னர் 13 வயது சிறுமியும் 17 வயது சிறுமியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்தச் சம்பவங்கள் மாநில அரசின் மீது அங்கு கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது

சிறுமி கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் உயரதிகாரி சத்யேந்திர குமார் சிங் கூறுகையில், ‘’நான் இப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தான் உள்ளேன். 7 பேர் கொண்ட தனிப்படை விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர். நானே தேடல் பணியில் ஈடுபட்டேன். தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது, கடும் தண்டனை கிடைக்கும் வரை ஓய மாட்டேன். தேவைப்பட்டால் தேசியப் பாதுகாப்புச் சட்டமும் குற்றவாளி மீது பாயும்’’ என்றார்.