சல்மான் கான்
சல்மான் கான்  முகநூல்
இந்தியா

மூன்று முறை துப்பாக்கி குண்டுகளின் சப்தம்.. பரபரப்பில் சல்மான் கானின் இல்லம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு அருகில், இன்று அதிகாலை தீடீரென மர்ம நபர்கள் இரண்டு பேர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை அடுத்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் திரையுலகில் தனக்கென தனி தடம் பதித்த நடிகர் சல்மான் கான். தமிழ் மொழியில் கமலஹாசனை போல இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்து கலக்கி வருகிறார்.

இந்நிலையில், இன்று(14.4.2024) அதிகாலை 5 மணி அளவில் மும்பையில், பந்த்ரா பகுதியில் அமைந்துள்ள இவரது வீட்டின் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் மூன்று முறை தூப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவ இடத்திற்கு தடவியல் குழுவினரும் விரைந்தநிலையில், சல்மான் கான் வீட்டில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

துப்பாக்கி சூட்டின் போது சல்மான் கான் வீட்டின் உட்புறம்தான் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, ஒய் ப்ளஸ் பாதுகாப்பு இவருக்கு வழங்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் அரங்கேறி இருப்பது சற்று பரப்பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட மர்மநபர்களை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து கொலை  மிரட்டல்?

முன்னதாக, சல்மான் கான் கடந்த 1998ம் ஆண்டு மான்வேட்டையாடி சர்ச்சையில் சிக்கினார் என்பதும் பிரபல கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய், சல்மான் கானை கொலை செய்வதாக பலமுறை மிரட்டலும், ஒரு தொலைக்காட்சி பேட்டியில், சல்மான் கானை கொல்வதே தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்று வெளிப்படையாக இவர் கூறினார் என்பதும் குறிப்பி டத்தக்கது

அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு சல்மான் கானுக்கு இமெயில் வாயிலாக கொலைமிரட்டல் வந்தது என்று சில காலமாகவே இவருக்கு உயிர் பயம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவமும் இதோடு தொடர்புடையதாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.