Assam landslide Reuters
இந்தியா

குடும்பத்தில் ஒருத்தர்கூட மிஞ்சல.. தனிமரமாக நிற்கும் ஒற்றை உயிர்.. அசாமில் நடந்தது என்ன?

சில துயரச் சம்பவங்களைப் பற்றி கேள்விப்படும்போதே அச்சம்பவத்தின் கொடூரம் இதயத்தைக் கனக்கச் செய்துவிடும். அப்படித்தான் தற்போது அசாமில் நடந்துள்ள ஒரு விபரீதம் கண்ணீர் வரவைப்பதாக உள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஐடா அருட்செல்வி

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 19 வயது இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கவுஹாத்தியின் நூன்மதி பகுதியில் உள்ள மத்காரியா பகுதியில் இன்று காலை சுமார் 8 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மலைப்பகுதியின் ஒரு பகுதி திடீரென சரிந்து, அதன் மண் மற்றும் பாறைகள் அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்ததில், வீட்டில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

Assam landslide

இந்த சம்பவத்தில் நாகேன் ராஜ்போங்ஷி என்ற 44 வயது நபரும், அவரது மனைவி சானு ராஜ்போங்ஷி என்பவரும், அவர்களது 12 வயது மகள் மீனா ராஜ்போங்ஷி ஆகியோரும் இடிபாடுகளுக்குள் புதைந்து உயிரிழந்தனர். எனினும், அவர்களது 19 வயது மகன் பிப்லாப் ராஜ்போங்ஷி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்டபோது குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாவட்டப் பேரிடர் மேலாண்மைத் துறையின் மீட்புப் படையினர் இடிபாடுகளுக்குள் இருந்து மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் அவை, பிரேதப் பரிசோதனைக்காக கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கவுஹாத்தியில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் கனமழையே இந்த நிலச்சரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மலை உச்சியில் இருந்து மண் சரிந்து வீட்டின் மீது விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Assam landslide

உயிரிழந்த நாகேன் ராஜ்போங்ஷி தினக்கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்ததாகவும், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வசித்து வந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இதனிடையே, அசாமின் அம்சிங் மற்றும் அத்காவ்ன் பகுதிகளிலும் இரண்டு பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் தலா ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதனை அதிகாரிகள் இன்னும் உறுதி செய்யவில்லை. தொடர் கனமழை காரணமாக கவுஹாத்தியின் பல தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்திருப்பது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்திருப்பதுடன் இதுபோன்ற விபரீதங்களுக்கும் வழி வகுத்துள்ளது.