பெங்களூரை சேர்ந்த அதுல் சுபாஷ் என்ற 34 வயதான ஐ டி ஊழியர், தனது மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினர் போலி வழக்குகளால் தன்னை துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியதோடு, நீதித்துறையை சாடியும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.
ஐ. டி ஊழியரின் அந்த 24 பக்க கடிதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியை தொடர்ந்து, சுபாஷின் மனைவி நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி, அவர்களுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். இந்த நிலையில், மூன்று பேரையும் கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முன்னதாக அவர் தற்கொலை செய்தபின் நடத்தபட்ட விசாரணையில் முதற்கட்டமாக, அவர் கைப்பட எழுதிய 24 பக்கங்கள் கொண்ட கடிதம் சிக்கியது. அதில், தனது தற்கொலைக்கான காரணம் குறித்து குறிப்பிட்ட அவர், “எனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். எனது நிம்மதியை அவர்கள் கெடுத்துவிட்டனர்” எனக்கூறியிருந்தார். மேலும் சுபாஷ் கடைசியாக வெளியிட்டிருந்த வீடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க்கிடம் கோரிக்கை வைத்து பேசியிருந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.