மதவெறுப்பால், வலதுசாரி கும்பலை சேர்ந்த சிலர் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த கொடூர சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெல்காம் மாவட்டத்தில் சவதாட்டி தாலுகாவின் உள்ளது ஹூலிகட்டி என்ற கிராமம். இங்கு அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் பூச்சிக்கொல்லி மருத்துகளை கலந்ததாக கூறப்படுகிறது.
15 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் பல குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் வலதுசாரி இந்து குழுவான ஸ்ரீராம் சேனாவின் தாலுகா தலைவர் சாகர் பாட்டீலும் அடங்குவார். பாட்டீல் மற்றும் இரண்டு பேர் சேர்ந்து பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் விஷத்தை கலந்துள்ளனர் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய திவீர விசாரணையில், "சம்பந்தப்பட்ட பள்ளியில் முஸ்லிம் தலைமை ஆசிரியர் பணியாற்றி வருவதாகவும் அவர் மீது பழி சுமத்தி வேறு பள்ளிக்கு மாற்றுவதற்காக தான் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்ததாக" தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் , “ மத அடிப்படைவாதமும் வகுப்புவாத வெறுப்பும் கொடூரமான செயல்களுக்கு வழிவகுக்கும், மேலும் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய இந்த சம்பவம் அதற்கு ஒரு சான்றாகும்.
"கருணையே மதத்தின் வேர்" என்று போதித்த ஷரன்களின் நிலத்தில் இவ்வளவு துணிச்சலும் வெறுப்பும் எழ முடியுமா? இந்த தருணத்தில் கூட என்னால் அதை நம்ப முடியவில்லை. மதத்தின் பெயரால் சமூகத்தில் வெறுப்பை விதைத்து, இப்படிப்பட்ட அரசியலை செய்கின்றனர் பாஜகவினர் .
வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் வகுப்புவாத கலவரங்களைத் தடுக்க நாங்கள் ஒரு சிறப்புப் பணிக்குழுவை உருவாக்கியுள்ளோம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். பொதுமக்கள் இத்தகைய சக்திகளுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும், புகார்களை அளிக்க வேண்டும். இதுபோன்ற கொடூரமான செயல்களைச் செய்த குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தகுந்த தண்டனை வழங்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். " என்று தெரிவித்துள்ளார்.