ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள ஜெகநாதர் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்றது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இங்கு 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் பிரபலமானது.
பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை விழா 9 நாட்கள் நடைபெறும். இந்தநிலையில், இந்த ஆண்டு ரத யாத்திரைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது இப்பணிகள் நிறைவடைந்தநிலையில், நேற்றைய தினம் (27.6.2025) ரத யாத்திரைக்கான பூஜைகள் நடைப்பெற்றது.
இதில், கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்திருந்தனர். பாதுகாப்பு படையினர் 10 ஆயிரம் பேருடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகரிக்க அங்கு கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கியதால் காயமடைந்தும், வாந்தி - மயக்கம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டும் 625 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே, கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக ரதவோட்டம் நிறுத்தப்பட்டது இதன்பின்னர், மீண்டும் யாத்திரை தொடங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய தினம் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்த பகுதியில் ரதயாத்திரையில் பங்கேற்கும் இரண்டு வாகனங்கள் உள்ளே நுழைந்தன. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பிரேமகந்த் மொகந்தி (80), வசந்தி சாகு (36), பிரபதி தாஸ் (42) ஆகியோர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் 12 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்குக் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்தார். பக்தர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த புரி காவல் துணை ஆணையர் விஷ்ணு சரண் பாதி மற்றும் கமாண்டென்ட் அஜய் பதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்யவும், மாவட்ட ஆட்சியர் சித்தரர்த் ஸ்வைன், எஸ்.பி. பினிட் அகர்வால் ஆகியோரை பணியிட மாற்றம் செய்யவும் முதல்வர் மோகன் சரண் உத்தரவிட்டார். பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.