இந்தியா

பீகாரில் மாசுபட்ட நீரால் 3 குழந்தைகள் உயிரிழப்பு: 50 பேர் பாதிப்பு

Sinekadhara

பீகார் மாநிலத்தில் மாசுபட்ட தண்ணீரை குடித்த 3 குழந்தைகள் உயிரிழந்ததுடன், 50-க்கும் அதிகமானோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த சுன்ஹட்டா கிராமத்தில் பழங்குடி இனத்தவர் வசித்து வருகின்றனர். பீகாரின் தலைநகரிலிருந்து 135 கிமீ தொலைவிலுள்ள இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 60 தொழிலாளர்கள் சென்னாரி வனப்பகுதியிலுள்ள 2 நீர்நிலைகளில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு சதாரி கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி வேலைசெய்ய முகாம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.

நீர்நிலைகளில் பெரும்பாலான வேலைகள் நிறைவுபெற்றதால், அவர்களை வனத்துறைக்கு சொந்தமான வாகனங்களிலேயே ஏற்றி, வெள்ளிக்கிழமை அவர்கள் கிராமத்தில் விட்டிருக்கின்றனர். ஆனால் சொந்த கிராமத்திற்குச் சென்ற அவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் மருத்துவரிடம் செல்ல தாமதித்துள்ளனர்.

இதனால் அங்கு வேலைக்குச் சென்ற கோரக்நாத் ஓரயோன் என்பவரின் குழந்தைகளான ரவி ஓரயோன் (10), புல்மதி குமாரி (11) மற்றும் ப்ரேம்ஷீலா (11) மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மற்றவர்களை அதயுரா, பாபுவா மற்றும் தேஹ்ரி மற்றும் பிற மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாக கிராமத் தலைவர் ஷ்யாம் நாராயண் ஓரயோன் தெரிவித்தார்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி பிரத்யும் கௌரவ் கூறுகையில், ’’பாதிக்கப்பட்ட 46 பேரை பரிசோதித்ததில், 18 பேருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு என்ன பாதிப்பு என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. டாக்டர் சுதிர் குமார் தலைமையிலான மருத்துவக்குழு அந்த வனப்பகுதி கிராமத்திற்கு சென்றுள்ளனர். மருத்துவக் குழு வந்தபிறகுதான் எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்த தெளிவான விவரங்கள் தெரியவரும்’’ என்று கூறியுள்ளார்.