தங்கக் காசுகள்
தங்கக் காசுகள் ட்விட்டர்
இந்தியா

ஆந்திரா: தேன் எடுக்க சென்றவர்களுக்கு கிடைத்த பழங்கால பொற்காசுகள்... இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!

Prakash J

ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்துள்ள சித்தேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வனப்பகுதியை ஒட்டியுள்ள மலைப்பகுதிக்கு அருகில் இருந்த பழமையான அங்கம்மா கோயில் அருகே தேன் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பாறையை அகற்றி மண்ணை தோண்டி எடுத்துள்ளனர். அவர்கள் மண்ணைத் தோண்டியபோது பித்தளை காசுகள் சில கிடைத்துள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் மேலும் மண்ணைத் தோண்டியுள்ளனர். அவர்கள் தொடர்ந்து தோண்டத் தோண்ட தங்கக்காசுகள் வந்துள்ளன.

இதற்கிடையே அந்த வழியாக, இரண்டு பேர் ஆடு மேய்க்க வந்துள்ளனர். அவர்கள் இருவரும், அந்த இளைஞர்கள் தங்கக் காசுகளைத் தோண்டுவதைக் கண்டு வியந்து போயுள்ளனர். இதைக் கண்ட அந்த 3 பேரும், ‘இதுகுறித்து யாரிடமாவது வெளியே சொன்னால், அவ்வளவுதான்’ என மிரட்டி விரட்டியடித்துள்ளனர். அதன்பின், மூவரும் தங்களுக்கு கிடைத்த தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து அதைத் தங்கக் காசுகளாக வைத்திருந்தால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அதை உருக்கி விற்கவும் திட்டம் தீட்டியுள்ளனர்.

அதற்காக, நகை வியாபாரிகளிடம், ‘இந்த தங்கக்காசுகளை, எங்கள் முன்னோர்கள் பல ஆண்டுகளாக பத்திரமாக வைத்திருந்தனர்’ என பொய் சொல்லி அதை உருக்கியுள்ளனர். அதன்மூலம் 9 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. அந்தப் பணத்தில் கார், ஆட்டோ என வாங்கி ஆடம்பர வாழ்க்கையும் வாழ்ந்துள்ளனர். அதுபோக, கிராம வங்கியில் வாங்கிய கடனையும் அவர்கள் அடைத்துள்ளனர். எனினும், அவர்களிடம் லட்சக்கணக்கில் மீதிப் பணமும் இருந்துள்ளது. இதற்கிடையில், அந்த மூவரின் மிரட்டலுக்கு ஆளான இருவரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பின், மூவரின் நடமாட்டத்தையும் கண்காணிக்க தொடங்கிய போலீஸார், ஒருகட்டத்தில் அவர்களைப் பிடித்து விசாரிக்க தொடங்கியுள்ளனர். அதில் மூவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து 490 கிராம் தங்கம், 280 கிராம் தங்க நாணயங்கள், கார், ஆட்டோ, ரொக்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் காசுகளை, நிபுணர்கள் உதவியுடன் போலீஸார் ஆய்வுசெய்தனர். அதில் அவை பழங்கால விஜயநகரப் பேரரசின் பொற்காசுகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கக் காசுகளைத் தோண்டி எடுத்த மூன்று இளைஞர்களும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.