நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு இன்று தொடங்கும் நிலையில் மணிப்பூரில் மீண்டும் கலவரம், தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெற்றது. இந்நிலையில் 24 நாட்கள் இடைவெளிக்கு பிறகு 2 ஆவது அமர்வு தொடங்க உள்ளது. இதில் பட்ஜெட் தொடர்பான ஒப்புதல்களை அரசு கோர உள்ளது. இது தவிர வக்ஃப் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் அம்மாநில பட்ஜெட்டுக்கான ஒப்புதல் உள்ளிட்டவற்றையும் மத்திய அரசு கோர உள்ளது.
மறுமுனையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கத்தை அவையில் கோரவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் முறைகேடு, ட்ரம்ப் நிர்வாகத்துடனான இந்தியாவின் அணுகுமுறை உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் விரிவான ஆலோசனைக்கு பின்பே அடுத்த கட்ட நகர்வுகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், இந்தி திணிப்பு உள்ளிட்ட விவகாரங்களை பிற தென் மாநில எம்.பி.க்களுடன் இணைந்து எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது.