இந்தியா

மேகாலயா சுரங்க விபத்தில் 2 வது உடல் மீட்பு!

மேகாலயா சுரங்க விபத்தில் 2 வது உடல் மீட்பு!

webteam

மேகாலயா சுரங்க விபத்தில் இரண்டறை மாதத்துக்குப் பிறகு இரண்டாவது உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளது. 

மேகாலயாவில் உள்ள கிழக்கு ஜைண்டியா மாவட்டத்தில், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி சட்டவிரோத சுரங்கத்தில் நிலக்கரி எடுக்க, 13 தொழிலா ளர்கள் சென்றனர். அப்போது, மழை வெள்ளம் காரணமாக அருகில் இருந்த லைத்தின் ஆற்றின் தண்ணீர், சுரங்கத்துக்குள் புகுந்தது. இதனால் ’எலி வளை சுரங்கம்’ எனப்படும் சிறிய வாசலை கொண்ட சுரங்கத்துக் குள் நுழைந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்களால் வெளியேற முடியவில்லை.

தொழிலாளர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படை, கடற்படை, தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். சுரங்கத் துக்குள் தண்ணீர் வற்றாததால் அவர்களை  மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு மாதத்துக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. அது அசாமைச் சேர்ந்த அமிர் ஹூசைன் என்பது தெரிய வந்தது. அணிந்திருந்த மோதிரத்தை வைத்து அவரது குடும்பத்தினர் அமிரை அடையாளம் கண்டனர். பின்னர் அவரது உறவினர்களிடத்தில் உடல் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்த நிலையில் மேலும் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் அழுகிய நிலையில் இருந்த அந்த உடலை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்நிலையில் அந்த உடல், இந்திய கடற்படை ரோபோ மூலம் நேற்று மீட்கப்பட்டது. 
பின்னர் மேகாலயா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த உடல், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 3 உடல்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.