இந்தியா

ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு - பிப். 7 முதல் அவசர வழக்காக விசாரணை

ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு - பிப். 7 முதல் அவசர வழக்காக விசாரணை

rajakannan

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவிப்பதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

இதனையடுத்து, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலையை எடுத்து மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்டிருந்தார்கள். 

இந்நிலையில், இன்றைய விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஏன் இன்னும் பதில் மனுத்தாக்கல் செய்யவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கடைசியாக ஒரே ஒரு முறை மட்டும் பதில் மனு அளிக்க வாய்ப்பு தரப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு தாமதமாவது குறித்தும் கவலை தெரிவித்தனர். 

இதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு தேவையான ஆவணங்களை சிபிஐ வழங்கவில்லை எனக் கூறினார். இதுதான் பிரச்னை என்றால் ஒரே ஒரு போன் காலில் தீர்த்திருக்க முடியுமே? என நீதிபதிகள் கூறினர். விசாரணை நீதிமன்ற ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்தனர். விசாரணை நீதிமன்றத்தின் அனைத்து ஆவணங்களும், வழக்கு தொடர்பான ஆவணங்களும் இரண்டு வாரங்களுக்குள் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று  நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல், புலனாய்வு அமைப்புகளுக்கும் அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். 

இதனையடுத்து, 2ஜி வழக்கில் அடுத்த விசாரணை எப்போது என்பது குறித்து சரியான தேதியை குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா கேட்டுக் கொண்டார். அதேபோல், விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இதனையடுத்து, 2ஜி மேல்முறையீட்டு வழக்கு அவசர வழக்கு என்ற அடிப்படையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தங்களது பதில் மனுவை பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள்ளாக தாக்கல் செய்ய வேண்டும், அதற்கு மேல் தாமதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.