உத்தரப் பிரதேசத்தில் 11 தொகுதிகளில் நடைபெற்ற சட்ட மேலவை தேர்தலில், பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியது. சமாஜ்வாதி கட்சியும் முக்கிய இடங்களை வென்றது. ஆனால், காங்கிரஸ் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதேபோல் பீகாரில் 8 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக, ஆர்.ஜே.டி., ஜன்சுராஜ், ஜேடியூ கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. பீகாரிலும் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. அடுத்து, மகாராஷ்டிராவில் நடைபெற்ற 5 இடங்களில் ஆளும் என்.டி.ஏ (NDA) கூட்டணிக் கட்சிகளே வெற்றிபெற்றுள்ளன. இதனால், மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் எண்ணிக்கையைத் தொடங்காதது அந்தக் கட்சிக்கு பெருத்த அடி விழுந்துள்ளது. இறுதியாக, ஆளும் அந்தஸ்தில் உள்ள கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சி பெருத்த ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளது.
அங்கு, பாஜக – ஜேடி(எஸ்) கூட்டணி 4 இடங்களையும் முழுமையாகக் கைப்பற்றியது. இதில், பதவியில் இருக்கும் காங்கிரஸ் சட்டசபை மேலவை உறுப்பினர் ஒருவர் வகிக்கும் ஓர் இடமும் அடங்கும். குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்தப் பகுதியான கலபுரகியை உள்ளடக்கிய வடகிழக்கு ஆசிரியர் தொகுதியையும், பெங்களூரு ஆசிரியர் தொகுதியையும் காங்கிரஸ் இழந்தது. மொத்தத்தில், நான்கு மாநிலங்களில் காலியாக இருந்த 28 சட்ட மேலவை தொகுதிகளுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியாமல் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியிருப்பது அக்கட்சியின் தலைமைக்கு மட்டுமின்றி, சட்டமன்றத் தேர்தலுக்கும் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.