27-Year Manhunt Ends: Former Militant Arrested After Living Without Phone or Aadhaar X
இந்தியா

கோழிப்பண்ணையில் சிக்கிய முன்னாள் தீவிரவாதி! 7 ஆண்டுகளாகத் தலைமறைவு!

7 ஆண்டுகளாகக் காவல்துறையினருக்குத் தண்ணி காட்டிய முன்னாள் தீவிரவாதி தற்போது சிக்கியுள்ளார். செல்போன், ஆதார் அட்டை என எந்தவொரு டிஜிட்டல் அடையாளமும் இல்லாமல் தலைமறைவாக வாழ்ந்து வந்த அவர், கோழிப்பண்ணையில் புதிய வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான முகமது மன்ஷா, கடந்த 2000-ஆம் ஆண்டு தனது 16 வயதில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளார். கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக, 2000-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்புக் காவல் அதிகாரி (SPO) ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் அவர் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்தார்.

இதற்கிடையே, 2007-ஆம் ஆண்டு ராணுவத்திடம் சரணடைந்த மன்ஷா, பின்னர் விடுவிக்கப்பட்டு தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். இருப்பினும், அவர் மீதான 13 குற்ற வழக்குகள் தொடர்பாக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனால், 2019ஆம் ஆண்டு குடும்பத்துடன் தலைமறைவானார்.

அவரைக் கண்டுபிடிக்க ரியாசி மாவட்டக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடுதல் பணியைத் தொடங்கினர். ஆனால், மன்ஷாவிடம் செல்போன், ஆதார் அட்டை என எதுவும் இல்லாததால் டிஜிட்டல் கண்காணிப்பு மூலம் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

J&K Police Arrest Former Militant After 7 Years in Hiding

இதையடுத்து, மனித உளவுத் தகவல்களைச் சேகரிப்பதில் காவல்துறையினர் கவனம் செலுத்தினர். சுமார் 7 ஆண்டுகளாகத் தொடர்ந்த தேடுதலுக்குப் பிறகு, காஷ்மீரின் ட்ரால் பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் அவர் குடும்பத்துடன் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ரியாசி மற்றும் அவந்திபோரா காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் ரியாசிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது, 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலைச் சம்பவம் உள்ளிட்ட அவர் மீதான குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள உள்ளார்.

7 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.