இந்தியா

காஷ்மீர்: ரூ.135 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

JustinDurai
காஷ்மீரில் ரூ.135 கோடி மதிப்புள்ள 27 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளில் இருந்து கடத்தப்படும் போதைப்பொருள்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்துவா அருகே ஹிரா நகரில் ஹெராயின் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் 27 கிலோ அளவிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 135 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹெராயினை கடத்தியது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையினர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.