INDIPENDENCE DAY  pt
இந்தியா

இந்தியாவை உருக்குலைக்க சதி! 253 பேர் அதிரடி கைது! பின்னணியில் பாகிஸ்தான்?

இந்திய மக்கள் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் திளைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களை நிலைகுலையச் செய்யும் வகையில் பாகிஸ்தான் உளவு அமைப்பின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐஎஸ்ஐ ஆதரவு வலையமைப்புடன் தொடர்புடைய ஷஹ்சாத் பட்டி, சமூக வலைதளங்கள் மூலம் இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத வலையில் இணைத்ததாக குற்றச்சாட்டு. சுதந்திர தினத்தை முன்னிட்டு பல மாநிலங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதி தீட்டிய இந்த வலையமைப்பை முறியடிக்க, ஒருங்கிணைந்த சோதனையில் 14 மாநிலங்களில் 253 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (ISI)-யுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஷஹ்சாத் பட்டி, சமூக வலைதளங்கள் மூலம் இந்திய இளைஞர்களைக் குறிவைத்து, அவர்களை மூளைச்சலவை செய்து தனது தீவிரவாத வலையமைப்பில் இணைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் 80-வது சுதந்திர தினம்ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஷஹ்சாத் பட்டி வலையமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் இந்திய இளைஞர்களைப் பயன்படுத்தி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

AMIT SHAH X POST

இந்தத் தாக்குதல் சதியை முறியடிக்கும் வகையில், தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் ஆதரவு பெற்ற வலையமைப்பு இந்தியாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் அவர்களது திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த நடவடிக்கையில் உத்தரப் பிரதேசத்தில் 62 பேர், ஹரியானவில் 52 பேர், டெல்லியில் 51 பேர், பஞ்சாப்பில் 44 பேர், கர்நாடகாவில் 3 பேர், கேரளாவில் 2 பேர் என 14 மாநிலங்களில் மொத்தம் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனைகளின்போது IED-கள், கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் உளவு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் CCTV கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட சில கையெறி குண்டுகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது

arrested

இந்த வலையமைப்புடன் தொடர்புடையவர்கள், இந்தியாவில் உள்ள காவல் நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மத வழிபாட்டுத் தளங்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்ததாகவும், இதற்காக உள்ளூர் நபர்களுக்கு பணம் வழங்கி அவர்களைப் பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் முக்கியமான சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த வலையமைப்பின் பின்னணியில் உள்ள நபர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்களை கண்டறியும் பணியில் பாதுகாப்பு மற்றும் விசாரணை அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர