இந்தியா

பஞ்சாப்: பிஎம் கேர்ஸ் மூலம் தரப்பட்ட வென்டிலேட்டர்களில் செயல்திறன் குறைவென குற்றச்சாட்டு

நிவேதா ஜெகராஜா

பஞ்சப்பில், பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து கடந்த வருடம் அளிக்கப்பட்ட 250 க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள், உபயோகிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, பஞ்சாப்பின் குரு கோபிந்த் சிங் மருத்துவ கல்லூரி மற்றும் ஃபரிட்காட் பகுதியை சேர்ந்த மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட வென்டிலேட்டர்களில், 80 ல் 71 வென்டிலேட்டர்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பது இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவையாவும் பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் AgVa என்ற ஹெல்த்கேரின் கீழ் தரப்பட்டிருக்கிறது.

செயல்படாமல் போடப்பட்டிருப்பதற்கான காரணமாக, இந்த வென்டிலேட்டர்கள் சரியாக இயங்குவதில்லை என்று மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செயல்படுத்தப்பட்ட தொடங்கப்பட்ட பின்னர், தொடக்கத்தில் ஒன்று முதல் இரண்டு மணி நேர இணைப்புக்கு பின்னர், இது முடக்கப்பட்டுவிட்டது என அவர்கள் கூறியுள்ளனர். இப்படி இடையிலேயே அது செயலிழந்து விட்டதால், மேற்கொண்டு இந்த இயந்திரத்தை நம்பி நோயாளிக்கு அதைவைத்து சிகிச்சையளிக்க முடியாது எனக் கூறியுள்ளார்கள் அவர்கள்.

ஃபரிட்காட் மருத்துவமனையின் மருத்துவரான ராஜ் பகதூர் என்பவர், இந்த வென்டிலேட்டர்கள் பற்றி கூறும்போது, "தரம் தாழ்ந்த இந்த இயந்திரங்களை, நோயாளிக்கு அவரின் ஆபத்து காலத்தில் உதவிக்கு பொறுத்துவது, அவரை மேலும்தான் பாதிக்கும். இவற்றிலுள்ள பிரச்னைகள் சரிசெய்யப்படும் வரை, இதை பயன்படுத்த முடியாது" எனக் கூறியுள்ளார். இம்மருத்துவமனையில் இருக்கும் 39 வென்டிலேட்டர்களில், 32 இப்போதைக்கு செயல்பாட்டில் இருப்பதாக மருத்துவ கல்லூரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்த மருத்துவமனையில், வென்டிலேட்டர் போதுமான அளவு இல்லாத காரணத்தினால், 300 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் சிகிச்சை கேள்விக்குறியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து, பஞ்சாப் தலைமை செயலாளர் வினி மகாஜன், இயந்திரங்களுக்கு பழுது நீக்கும் பணிகளை முடுக்கி விட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். மட்டுமன்றி, அவசர நிலையை கருத்தில் கொண்டு பத்து புதிய வென்ட்லேட்டர்களை இம்மருத்துவமனைக்கு வழங்குவதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

பழைய தரவுகளை வைத்து பார்க்கும்போது, கடந்த வருடத்தில் 25 கோடி மதிப்பிலான ஏறத்தாழ 250 வென்டிலேட்டர்களை இந்திய அரசு இம்மாநிலத்துக்கு தந்திருப்பதாக தெரியவருகிறது. இவற்றில் பல, இப்படியான சிக்கலால் மாநிலம் முழுக்க பயன்பாட்டில் இல்லாமல் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. செயல்திறன் காரணம் மட்டுமன்றி, விநியோகிக்கப்படாமல் அரசு கிடங்கிலேயேவும் பஞ்சாப் வைத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இதற்கான காரணமாக, 'மருத்துவமனைகள் தரப்பில் வென்டிலேட்டர் தேவை இல்லை' என்று அம்மாநில அரசு தெரிவித்தது. அதேநேரம் வென்டிலேட்டர் கிடைத்தாலும் அதை உபயோகப்படுத்த தேவையான பணியாளர்கள், மருத்துவமனைகளில் இல்லை என்ற விமர்சனமும், அதனால்தான் 'மருத்துவமனைகள் வென்டிலேட்டர் வேண்டுமென கேட்பதில்லை' என்றும் சொல்லப்படுகிறது.

என்ன காரணமென்பது கேள்விக்குறியாகும் போது, பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் பால்பிர் சிங் கூறும்போது, இவற்றில் 25 % வென்டிலேட்டர்கள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் இருப்பதாக அவரேவும் தெரிவித்திருப்பது, அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.

தகவல் உறுதுணை : India Today