model image x page
இந்தியா

ராஜஸ்தான்| ஹோலி வண்ணப்பொடி பூச மறுத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்! கொண்டாட்டத்தின் பேரில் கொடூரக் கொலை!

ராஜஸ்தானில் ஹோலி வண்ணம் பூசிக்கொள்ள மறுத்ததால் இளைஞர் ஒருவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் ரம்ஜான் நோன்பு இருக்கும் இஸ்லாம் சமூகத்தினருக்கும் வெள்ளிக்கிழமை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், வடமாநிலங்களில் பாஜகவினர் ஹோலி பண்டிகையையோட்டி முஸ்லிம் மதத்தினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் உ.பியில் கிட்டத்தட்ட 10 மசூதிகள் தார்பாய்கள் கொண்டு மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஹோலி வண்ணம் பூசிக்கொள்ள மறுத்ததால் இளைஞர் ஒருவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் ரால்வாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர், ஹன்ஸ்ராஜ் (25). இவர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். இந்தச் சூழலில் கடந்த 12ஆம் தேதி, மாலை இவர் கிராம நூலகத்தில் படித்துகொண்டிருந்தபோது ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் அசோக், பப்லு மற்றும் கலுராம் ஆகிய மூவர் ஹன்ஸ்ராஜ் மீது கலர் பொடி பூச முனைத்துள்ளனர். ஆனால் வண்ணம் பூசிக்கொள்ள ஹன்ஸ்ராஜ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் அவரை உதைத்து, பெல்ட்டால் விளாசியுள்ளனர். இதன் உச்சமாக மூவரில் ஒருவர், ஹன்ஸ்ராஜ் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் மூவரும் தப்பியோடிய நிலையில் ஹன்ஸ்ராஜ் உடலுடன் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள், ’ஹன்ஸ்ராஜின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்று கோரினர். பின்னர் காவல்துறையினரின் உறுதிமொழிக்குப் பிறகு, அவர்கள் கலைந்து சென்றனர்.