Marriage rituals
Marriage rituals File image
இந்தியா

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த 24 வயது பழங்குடியின பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

சங்கீதா

ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டம் ஜோகிதி கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயதான பழங்குடியின இளம்பெண் ஒருவர். இவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர், தனது பெற்றோரை இழந்துள்ளார். இவருக்கு திருமணமான 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். சகோதரன் நோய்வாய்ப்பட்டு உடல் நலமின்றி இருந்து வரும்நிலையில், மூத்த சகோதரி லதேஹர் மாவட்டம் மணிகா கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, தனது தங்கையான அந்த பழங்குடியினப் பெண்ணை திருமணம் முடித்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனால் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று அந்த இளம்பெண் தெரிவித்தும், கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி திருமணம் நடத்தி வைப்பதற்கான சடங்குகளை உறவினர்கள் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த 24 வயது இளம்பெண், வீட்டைவிட்டு வெளியேறி சத்தர்பூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. பின்னர், சகோதரன் (Cousin Brothers) முறையான உறவினர்களின் அழைப்பின்பேரில் கடந்த 10-ம் தேதி வீட்டுக்கு திரும்பிய இளம்பெண்ணை, திருமணம் செய்துகொள்ளுமாறு மீண்டும் அவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அப்போதும் அந்த இளம்பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர் அப்பெண்ணின் உறவினர்கள். யாரோ ஒருவரை அப்பெண் காதலிப்பதாலேயே வீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவிப்பதாக கூறி, காதலரின் பெயரை சொல்லுமாறு கிராமத்தினர் பஞ்சாயத்தில் வலியுறுத்திய நிலையில், அப்பெண் எந்தப்பதிலும் பேசாமல் அமைதியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அவரின் இந்த அமைதியால் கோபமடைந்த பஞ்சாயத்து நபர்கள், மொட்டை அடித்து அவரை வனப்பகுதியில் கொண்டுபோய் விடுமாறு கூறியுள்ளதாக தெரிகிறது.

மேலும், உறவினர்கள் உள்பட அங்கிருந்த அக்கிராம மக்கள் அப்பெண்ணை குச்சியால் கடுமையாக தாக்கி, மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச்சென்று போய் வனப்பகுதியில் விட்டு விட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மாலை முதல் காலை வரை காட்டிலேயே அந்தப் பெண் இருந்ததாகவும் சொல்லப்படும் நிலையில், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சிலர் கால்நடைகளை வனப்பகுதியில் மேய்ப்பதற்காக நேற்று காலை சென்றுள்ளனர். அப்போது பழங்குடியினப் பெண் மரத்திற்கு அடியில், படுகாயங்களுடன் கிடந்ததை பார்த்து தகவல் தெரிவித்ததையடுத்து, பேட்டன் காவல்துறையினர் சென்று அப்பெண்ணை மீட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்துள்ளனர்.

பின்னர், டால்டோங்கஞ்ச்சில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு, சில அடிப்படை பரிசோதனைகள் அப்பெண்ணுக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்தப் பின்னரே எதுவும் சொல்லமுடியும் என்றும், எனினும் உடல் மெலிந்து காணப்பட்டாலும், அப்பெண் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் ரஞ்சன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உடல்நிலை தேறியப்பின்னர் அப்பெண்ணின் வாக்குமூலத்தை பதிவுசெய்து எஃப்ஐ.ஆர் பதிவுசெய்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.