நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மத்திய-மாநில அரசுத் துறைகளில் மட்டும் 24 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி முதல் ஜூலை வரை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்டத் தகவல்களில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. அதில், ஆரம்பநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும் 10 லட்சத்து ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக காவல்துறையில் 5 லட்சத்து 4 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ரயில்வேயில் 2 லட்சத்து 4 ஆயிரம் பணியிடங்களும், அங்கன்வாடியில் 2 லட்சத்து 2 ஆயிரம் காலிப்பணியிடங்களும் காலியாக இருப்பது அந்த தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. இதேபோல், சுகாதார மையங்கள், அஞ்சல் துறைகள் உள்ளிட்டவற்றிலும் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டிருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.