கொரோனா காலத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினியில் கை கழுவவேண்டும் என மக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியது. ஆனால் ஆந்திராவில் சானிட்டைசரை குடிக்கும் பழக்கத்திற்கு 235 பேர் அடிமையாகி இருப்பதாக காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இங்குள்ள பிரகாசம் மாவட்டத்தில், மது கிடைக்காத காரணத்தால் பலரும் சானிட்டைசரை குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானது திங்களன்று காவல்துறைக்குத் தெரியவந்தது. கடந்த வாரத்தில் மட்டும் அதே மாவட்டத்தின் குரிச்சேடு மண்டல் கிராமத்தில் சானிட்டைசர் குடித்து 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
“முதலில் 35 பேரும், பிறகு 200 பேரும் அடையாளம் காணப்பட்டார்கள். இன்னும் அதிகமான பேர் சானிட்டைசர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். அவர்களையும் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதன் பாதிப்புகள் பற்றி ஆலோசனைகள் வழங்கவும் முடிவுசெய்துள்ளோம்” என்று காவல்துறை கண்காணிப்பாளர் சித்தார்த் கெளசல் கூறினார்.
ஊரடங்கு காரணமாக குரிச்சேடு, தார்சி, வினுகொண்டா மண்டல்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மதுவுக்குப் பதிலாக சானிட்டைசர் குடிக்கும் பழக்கத்திற்கு மக்கள் அடிமையாகிவருவது அதிர்ச்சியளிக்கிறது.