செம்மரம் வெட்ட வந்ததற்காக ஆதாரங்கள் கிடைக்காததால், குறுகிய அறையில் 23 தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ரயில்வே கோடூர் போலீசார் கடந்த 13 ஆம் தேதி காலை திருப்பதியில் இருந்து கடப்பா நோக்கி வந்த 3 பேருந்துகளில் இருந்து 23 தமிழர்களை கைது செய்தனர். தமிழில் பேசிய காரணத்திற்காக கைது செய்யப்பட்ட அவர்கள் குறித்து செய்தி சேகரிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு மூன்று தினங்கள் ஆன நிலையில் அவர்கள் செம்மரம் வெட்ட வந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், அவர்கள் மீது பொய் வழக்கு தொடருவதற்காக ஒரு குறுகிய அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் கைதானவர்களை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜார்ப்படுத்த வேண்டிய நிலையில் மூன்று தினங்களாக அடைத்து வைத்திருப்பது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.