Model image x page
இந்தியா

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் |கலைப்பா.. மாற்றமா? 23 சட்டமன்றங்களின் பதவிக்காலம் என்னவாகும்?

இதற்காக 129ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, 2024 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது பி.பி. சவுத்ரி தலைமையிலான 41 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் (Joint Parliamentary Committee) ஆய்வில் உள்ளது.

Prakash J

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை 2029ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில், இந்தியாவில் உள்ள 23-க்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை (Tenure) மாற்றியமைப்பது அவசியமாகிறது.

இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரேநேரத்தில் தேர்தலை நடத்தும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' (One Nation, One Election) திட்டத்தை 2029ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாகத் தேர்தல்கள் நடந்து வருவதைத் தவிர்த்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒட்டுமொத்த தேர்தல்களையும் நடத்தி முடிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். இதற்காக 129ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, 2024 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது பி.பி. சவுத்ரி தலைமையிலான 41 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் (Joint Parliamentary Committee) ஆய்வில் உள்ளது.

மேலும், இந்தியாவில் தொடர்ச்சியாகத் தனித்தனியே தேர்தல்களை நடத்துவதால் நாட்டிற்கு சுமார் ₹7 லட்சம் கோடி பொருளாதார இழப்பு அல்லது கூடுதல் செலவு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் நடத்தினால் இந்த வீண் செலவு தவிர்க்கப்படும். தவிர, அடிக்கடி தேர்தல் நடப்பதால் விதிமுறை அமலுக்கு வந்து, மக்கள் நலத்திட்டங்களும், கொள்கை முடிவுகளும் முடங்குவது தடுக்கப்படும், அடுத்து தேர்தல் பணிகளுக்கு ஈடுபடுத்தப்படும் அதிகாரிகளுக்கும் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு மத்திய அரசு ’ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தைப் பரிசீலித்து வருகிறது.

அதேநேரத்தில், இந்தத் திட்டத்தை 2029இல் நடைமுறைப்படுத்த வேண்டுமானால், இந்தியாவில் உள்ள 23-க்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை (Tenure) மாற்றியமைப்பது அவசியமாகிறது. அதாவது, தேர்தல் சுழற்சியை ஒருங்கிணைக்க 13 சட்டமன்றங்களின் பதவிக்காலம் குறைக்கப்படவும் 10 சட்டமன்றங்கள் கலைக்கப்படவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்களும், சட்டமன்றம் கொண்ட 3 யூனியன் பிரதேசங்களும் (டெல்லி, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர்) உள்ளன. இதில், ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மக்களவைத் தேர்தலோடு தங்களின் சட்டமன்றத் தேர்தலையும் நடத்தி விடுகின்றன.

ஆனால், எஞ்சிய 23-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் தங்களின் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தைத் தொடங்கியுள்ளன அல்லது தொடங்கவுள்ளன. இந்த நிலையில்தான், 2029இல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், இந்த மாநில அரசுகள் தங்களின் 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யும் முன்பே, அவற்றைக் கட்டாயமாகக் குறைக்க வேண்டியிருக்கும். மாநிலங்களின் சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின்படி மக்களின் வாக்குகளால் 5 ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளின் ஆயுட்காலத்தை இப்படிச் சட்டப்பூர்வமாகக் குறைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.