இந்தியா

ஒடிசா: திரண்டிருந்த மக்கள் மீது எம்எல்ஏவின் கார் மோதி விபத்து

ஒடிசா: திரண்டிருந்த மக்கள் மீது எம்எல்ஏவின் கார் மோதி விபத்து

கலிலுல்லா

ஓடிசாவில் சட்டமன்ற உறுப்பினரின் கார் கட்டுப்பாட்டை இழந்து, கூடியிருந்த மக்கள் மீது மோதியதில் ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில், எம்.எல்.ஏ பிரசாந்த் ஜக்தேவ் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் எம்எல்ஏ பிரசாந்த் ஜக்தேவை கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்தில் 7 போலீசார் உட்பட 22 பேர் காயமடைந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பானாபூர் தொகுதி மேம்பாட்டு அலுவலகத்திற்கு (பிடிஓ) வெளியே பாஜக ஆதரவாளர்கள் உட்பட ஏராளமானோர் திரண்டிருந்தபோது, பிரசாந்த் ஜக்தேவின் கார் மக்கள் மீது மோதியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் சட்டமன்ற உறுப்பினர் பிரசாந்த் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் குர்தா எஸ்பி அலேக் சந்திரா பதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவரை தாக்கியதற்காக ஆளும் பிஜு ஜனதா தளத்திலிருந்து பிரசாந்த் ஜக்தேவ் இடைநீக்கம் செய்யப்பட்டார். குர்தா மாவட்ட திட்டக்குழு தலைவர் பதவியில் இருந்தும் ஜக்தேவ் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, எம்எல்ஏவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் பிருத்விராஜ் ஹரிச்சந்திரா வலியுறுத்தியுள்ளார்.