ஐசியு வார்டில் பெண் நோயாளி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாக உறுதிப்படுத்தப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 21 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவரது பெற்றோர் அவரை குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பெண்ணின் உடல்நிலை மோசமாகி, அவர் சுய நினைவை இழந்ததால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தனது தந்தையை அழைத்த அந்த இளம்பெண், தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் திடீர் திருப்பமாக, பெண் நோயாளி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனை ஊழியர்களிடம் நடத்திய விசாரணையிலும், சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் குற்றஞ்சாட்டிய பெண்ணின் கடிதத்தை ஆய்வு செய்ததிலும் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை என குருகிராம் போலீஸ் ஆணையர் கே.கே.ராவ் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் முழு சம்பவத்தையும் உன்னிப்பாக விசாரித்து வருகின்றனர் என்றும் பாலியல் புகார் குறித்து 1,800 ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதாகவும், அதில் மிகவும் சந்தேகத்திற்குரிய நபர்களாக அறியப்பட்ட விகாஸ் என்பவர் உள்ளிட்ட 12 பேரிடம் நடத்திய விசாரணையில். பெண் நோயாளி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை தங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் கே.கே.ராவ் கூறியுள்ளார்.
இருப்பினும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 161 ன் கீழ் காவல்துறையினர் அந்தப் பெண்ணின் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணின் இறுதி அறிக்கையை பிரிவு 164-ன் கீழ் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்ய ஹரியானா மாநில மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளிக்க உறுதி தருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.