கூகுள் தேடல்
கூகுள் தேடல் புதிய தலைமுறை
இந்தியா

2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 விஷயங்கள்.. முதலிடத்தில் சந்திரயான்!

PT WEB

நடப்பாண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய நிகழ்வுகளில் சந்திரயான் விண்கலம் ஏவுதல் முதலிடம் பிடித்துள்ளது.

சந்திரயான் 3

2023ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில், தனது தளத்தில் பயனாளிகளின் தேடுதல் குறித்த விவரங்களை கூகுள் நிறுவனம் பிரிவுவாரியாக வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்தாண்டு அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகள் குறித்த பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா வெற்றிகரமாக சந்திரயான் விண்கலத்தை ஏவியது குறித்த விவரங்களையே மிக அதிகம் பேர் தேடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தல் முடிவுகள் 2ஆவது இடத்திலும், இஸ்ரேல் போர் நிகழ்வுகள் 3ஆவது இடத்திலும் உள்ளன. பாலிவுட் குணச்சித்திர நடிகர் சதீஷ் கவுசிக் குறித்த தேடல் 4ஆம் இடத்தில் உள்ளது. 2023ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் 5ஆவது இடத்திலும், துருக்கி நிலநடுக்கம் 6ஆவது இடத்திலும் உள்ளன.

ஏராளமான கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான உத்தரப்பிரதேச அரசியல்வாதி அதிக் அகமதுவின் கொலை, நடிகர் மேத்யூ பெர்ரியின் மர்ம மரணம் குறித்த தேடல்கள் 7 மற்றும் 8ஆவது இடங்களில் உள்ளன. மணிப்பூர் கலவரங்கள் குறித்த தேடல் 9ஆவது இடத்திலும் ஒடிசா ரயில் விபத்து குறித்த தேடல் 10ஆவது இடத்திலும் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இவற்றை தவிர, கிரிக்கெட் குறித்த தேடுதல்கள் மிக அதிகளவில் இருந்ததாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவிலும் அறிந்துகொள்ளலாம்.