உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் ராஜ்பூர் பகுதியில் வசித்துவரும் 75 வயதான கௌசல்யா தேவி என்ற மூதாட்டி, வழக்கமாக காலை நேரத்தில் வாக்கிங் மேற்கொள்வது வழக்கம். இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (6.7.2025 ) காலை வழக்கம்போல வாக்கிங் மேற்கொண்டார் கௌசல்யா தேவி.
இந்த சமயத்தில் முகமது ஜாயித் என்பவர்தான் வளர்க்கும் 2 ‛ராட்வீலர்' நாயை அழைத்து கொண்டு ‛வாக்கிங்' சென்றுள்ளார். அப்போது, முகமது அழைத்து வந்த 2 ராட்வீலர் நாய்களும் அவரது பிடியில் இருந்து தப்பியது. அதுமட்டுமின்றி வாக்கிங் சென்ற கௌசல்யா தேவியை விரட்டி விரட்டி கடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்தான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதில் கவுசல்யா தேவி படுகாயமடைந்தார். இறுதியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள டூன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாய் கடித்து குதறியதில் கௌசல்யா தேவியின் தலை, கைகள், கால்கள், காது ஆகியவற்றில் ஆழமான காயங்களும், இரண்டு எலும்புகளில் முறிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், 200 தையல்கள் போட வேண்டிய நிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டிருக்கிறார். உடலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. கௌசல்யா தேவியின் உடல்நலம் இன்னும் கூட சீராகவில்லை. மோசமான நிலையில் தான் உள்ளார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில், கௌசல்யா தேவியின் மகன் உமாங் நிர்வால் அளித்த புகாரின் அடிப்படையில், நாய் உரிமையாளர் நஃபீஸ் (40) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராட்வீலர் நாயின் உரிமையாளர் முகமது ஜாயித்தின் அலட்சியம் தான் கவுசல்யா தேவியை நாய் கடிக்க முக்கிய காரணம் என்று கூறினர். இதையடுத்து முகமது ஜாயித்தை போலீசார் கைது செய்துள்ளனர்
காவல்துறையினரின் கூற்றுப்படி, விசாரணையின் போது, ஆபத்தான நாய் இனங்களை வைத்திருப்பதற்கான உரிமத்தை நஃபீஸ் நகராட்சி நிறுவனத்திடமிருந்து பெறவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதனால், நஃபீஸை போலீசார் கைது செய்தனர். மேலும், ஆபத்தான நாய் இனங்களை உரிமம் இல்லாமல் வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நகராட்சியுடன் காவல்துறை இணைந்து செயல்படும் என்று டேராடூன் மூத்த காவல் கண்காணிப்பாளர் அஜய் சிங் தெரிவித்தார் .
ராட்வீலர் நாயை எடுத்து கொண்டால் அது மிகவும் ஆக்ரோஷமாகவும், மூர்க்கத்தனம் கொண்டவையாகவும் இருக்கும். இந்த நாய் வளர்ப்பு பல நாடுகளில் தலை செய்யபப்ட்டுள்ளது. நம் நாட்டிலும் கடந்த ஆண்டு ராட்வீலர் உள்ளிட்ட நாய்கள் கடித்து சிலர் இறந்தனர். ரோட்வீலர்கள், பிட்புல்ஸ் மற்றும் அமெரிக்கன் புல்டாக்ஸ் உள்ளிட்ட 23 வெளிநாட்டு இன நாய்களை இறக்குமதி செய்தல், இனப்பெருக்கம் செய்தல், வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதை மத்திய அரசு தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.