AC  REUTERS
இந்தியா

'20 கோடி புதிய AC-கள்' - 2035ல் காத்திருக்கும் சவால்? எப்படி சமாளிக்கும் இந்தியா??

வெப்பத்தைத் தணிக்கும் AC-களின் பயன்பாடு இந்தியாவின் மின்சாரத் தேவையை பல மடங்கு அதிகரிக்கப்போகிறது. 2035-க்குள் 20 கோடி AC-கள் கூடும் என்ற கணிப்பு எதிர்கால எரிசக்தி சவால்களை வெளிப்படுத்துகிறது.

PT WEB

செய்தியாளர் : வெற்றிச்செல்வி

அதிகரித்து வரும் வெப்பத்தைச் சமாளிக்க நாம் பயன்படுத்தும் AC, அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சாரக் கட்டமைப்பையே மாற்றப் போகிறது. கோடிக்கணக்கில் அதிகரிக்கப் போகும் ஏசி பயன்பாடு, நாட்டின் எரிசக்தித் தேவையையும் சுற்றுச்சூழலையும் எந்த அளவுக்கு மாற்றப் போகிறது? என்ற பதற்றம் எழுந்திருக்கிறது.

வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க ஏசி இல்லாமல் இருக்கவே முடியாத சூழல் உருவாகி வருகிறது. ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் 90 சதவீத வீடுகளில் ஏசி பயன்படுத்தப்படும் நிலையில், இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் 5-ல் ஒரு வீட்டிற்குக் கூட இன்னும் ஏசி இல்லை.

AC

ஆனால், வெப்பநிலை உயர்வு, நகரமயமாக்கல் மற்றும் மக்களின் வருமான உயர்வு காரணமாக, இந்த நிலை வேகமாக மாறப்போகிறது. இதன் விளைவாக, 2035-க்குள் இந்தியாவில் மட்டும் கூடுதலாக 20 கோடி ஏசிக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சர்வதேச எரிசக்தி அமைப்பு (IEA) கணித்துள்ளது.

இந்த அசுர வளர்ச்சியால், உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் ஏசிக்களில் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பங்கு, தற்போதுள்ள 10 சதவீதத்திலிருந்து 2035-ல் 20 சதவீதமாக உயரப்போகிறது. அதாவது, உலகின் ஐந்தில் ஒரு பங்கு ஏசிக்கள் இந்தப் பகுதிகளில் மட்டுமே இருக்கும்.

இது மக்களுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் கொடுத்தாலும், நாட்டின் மின்சாரத் தேவையை பல மடங்கு உயர்த்தப்போகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மின்சாரத் தேவை ஆண்டுக்கு 6 சதவீதமும், பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட ஒட்டுமொத்த எரிசக்தித் தேவை ஆண்டுக்கு 2.5 சதவீதமும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

உலக சராசரியை விட இது மூன்று மடங்கு அதிகமான வேகம். இந்தத் தாக்கம் இந்தியாவுடன் நின்றுவிடாமல், சர்வதேச அளவிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. 2035-க்குள் உலகம் முழுவதும் கட்டிடங்களைக் குளிரூட்டுவதற்காக மட்டும், கூடுதலாக 1,700 டெராவாட்-மணி மின்சாரம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது; இது இன்றைய இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவைக்கு நிகரானது. அதோடு, வெப்ப அலைகளின் தீவிரமும் கால அளவும் அதிகரித்தால், ஏசி பயன்பாடு உயர்ந்து மின்சாரத் தேவை தற்போதைய கணிப்பை விட மேலும் 40 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ELECTRICITY

இந்த அபரிமிதமான தேவையைச் சமாளிக்க, 2025-ல் சுமார் 2 லட்சத்து 11 ஆயிரத்து 400 கோடி யூனிட்டாக இருந்த இந்தியாவின் மின்சார உற்பத்தியை, 2035-க்குள் 3 லட்சத்து 58 ஆயிரத்து 500 கோடி யூனிட்டாக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி நுகர்வு நாடாக இருப்பதால், இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய நிலக்கரியின் பயன்பாடு தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும்.

இதன் விளைவாக, இந்தியாவின் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் 2040-ம் ஆண்டிலேயே உச்சத்தை அடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய உச்சகட்ட கார்பன் வெளியேற்றம், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை மேலும் அதிகரித்து மீண்டும் கடுமையான வெப்ப அலைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.