உத்தரப்பிரதேசம் எக்ஸ் தளம்
இந்தியா

உ.பி: குடித்துவிட்டு கொடுமைப்படுத்திய கணவர்கள்.. மனவிரக்தியில் தங்களுக்குள் திருமணம் செய்த மனைவிகள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், தங்களுடைய குடிகார கணவர்களிடமிருந்து பிரிந்த நிலையில், தாங்களே ஒருவரை ஒருவர் திருமணம் செய்துகொண்டது பேசுபொருளாகி உள்ளது.

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்தவர்கள் கவிதா மற்றும் குஞ்சா என்ற பப்லு. இப்பெண்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டா மூலம் தோழிகளாகி உள்ளனர். ஒருவருக்கொருவர் அறிமுகமான இவர்கள் இருவரும், கடந்த 6 ஆண்டுகளாக நல்ல தோழிகளாக இருந்துள்ளனர். இருவருமே, தங்களின் கணவர்கள் தங்களை குடித்துவிட்டுக் கொடுமைப்படுத்தும் செயல்களை அடிக்கடி பகிர்ந்து கொண்டுள்ளனர். கணவர்களின் செயலால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர்கள் இருவரும், ஒருகட்டத்தில் தங்களது கணவர்களை வெறுத்துள்ளனர்.

திருமணம்

இதில் ஒருபெண் முதலில் தன் கணவர் வீட்டைவிட்டு வெளியேறி பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். மற்றொருபுறம் மற்றொரு பெண், கணவரால் வீட்டைவிட்டு துரத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தோழிகளான இருவரும், ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி ஆறுதலடைந்துள்ளனர். இதில் ஒருகட்டத்தில், இருவரும் ‘நாமே ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ளலாம்’ என முடிவெடுத்திருக்கின்றனர்.

இதையடுத்து, இருவரும் கடந்த ஜனவரி 24ஆம் தேதி, தியோரியாவில் உள்ள சோட்டி காசி என்றழைக்கப்படும் சிவன் கோயிலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். கவிதாவின் நெற்றியில் முதலில் குங்குமம் வைத்த குஞ்சா, பின்னர் மாலை மாற்றிய நிலையில், இருவரும் திருமணச் சடங்குகளைச் செய்துகொண்டனர்.

திருமணம் குறித்து குஞ்சா, “நாங்கள் 2 பேரும் முதன்முதலாக இன்ஸ்டாகிராம் வழியே தொடர்புகொண்டோம். பின்னர் இருவரும் குடும்ப கதையை பேசிக்கொண்டோம். அப்போதுதான் எங்களது இருவரின் கணவர்களுமே குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்தது. தினமும் குடித்துவிட்டு போதையில் வந்து தகராறில் ஈடுபடுவார்கள். ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல், நாங்களே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். நாங்கள் கோரக்பூரில் இணைந்து வாழ முடிவு செய்துள்ளோம். மேலும் எங்கள் வாழ்வைத் தக்கவைக்க வேலை செய்ய முடிவு செய்துள்ளோம்.

உத்தரப்பிரதேசம்

நாங்கள் இணைந்திருப்பதில் உறுதியாக உள்ளோம். எங்களை யாரும் பிரிக்க அனுமதிக்க மாட்டோம். தற்போது எங்களுக்கு நிரந்தர வீடு இல்லை. ஆகவே வாடகைக்கு வீடு எடுத்து தங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கோயில் பூசாரி உமா சங்கர் பாண்டே, “அந்தப் பெண்கள் 2 பேரும் திருமண மாலைகள் மற்றும் குங்குமம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வந்து, சடங்குகளை செய்தனர். திருமணம் முடிந்ததும் அமைதியாக திரும்பிச் சென்று விட்டனர்” என்றுள்ளார்.