புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான தாக்குதலில் தொடர்புடையோருக்கு உதவிய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள நவ்ஷெரா பகுதியில் இந்திய பாதுகாப்புப்படை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது புதிதாக தோண்டப்பட்டிருந்த ஒரு குழியில் சோதனை செய்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ராணுவ மேஜர் சித்ரேஷ் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லான் பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராணுவத்தினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்கும்போது ராணுவத்தினருக்கும்- பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதில் ஒருவர் ராணுவ மேஜர் ஆவார்.
இதையடுத்து பல மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காஸி ரசீத், கம்ரான் ஆகிய பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.