ஒடிசாவில் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஒரு கும்பல் தவறுதலாக 16 வயது இளைஞர்கள் இருவரை சிகரெட் நெருப்பால் கொடூரமாக சுட்டும் , சிறுநீரை குடிக்க கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது பார்க்கலாம்.
ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (19.4.2025) மாலையில் கண்காட்சி நடந்துள்ளது. இதில், கோடகசங்கா மற்றும் பிரதான் சாஹி கிராமங்களைச் சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிராட் சாஷி கிராமத்தை சேர்ந்த 16 வயது இளைஞர்கள் இருவர், கோடகசங்கா கிராமத்தின் வழியாக சென்றுள்ளனர் . இந்த இளைஞர்களை பார்த்த அக்கிராமத்தை சேர்ந்த சிலர், கண்காட்சியில் சண்டையிட்ட பிரதான் சாஹி கிராமத்தை சேர்ந்தவர்கள்தான் இந்த இளைஞர்கள் என்று நம்பி, இருவரையும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் தாங்கள் பிரதான் சாஹி கிராமத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று பலமுறை கதறியும் அவர்கள் நம்பவில்லை . மாறாக, சிகரெட் கொண்டு கொடூரமான இளைஞர்கள் மீது சூடு வைத்தும், மின்சார கம்பத்தில் கட்டிவைத்து அடித்தும், சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தியும் சரமாறியாக தாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் தெரிவிக்கையில், எங்களை அவர்கள் அடிப்பதை 50க்கும் மேற்பட்டோர் பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்கள் எங்களை காப்பாற்றுமாறு கெஞ்சினோம். ஆனால், யாரும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை. அதற்கு மாறாக, சம்பவத்தை வீடியோ எடுத்தனர். சுமார் 30 நிமிட சித்திரவதைக்குப் பிறகு, அவர்கள் எங்களை விடுவித்தனர்.” என்றார்.
பாதிக்கப்பட்ட இளைஞர்களின் தந்தை ஒருவர் தெரிவிக்கையில், "இரண்டு கிராமங்களுக்கும் இடையே சில தகராறுகள் இருந்தன. இதற்காக இவர்களை அடித்து, சிறுநீர் குடிக்கக் கட்டாயப்படுத்தினர். நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீஸார் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர். மேலும், வீடியோவில் அடையாளம் காணப்படும் நபர்களை தேடும்பணியில் இறங்கியுள்ளனர்.