இந்திய சிறைச்சாலைகளில் 3 பேரில் இருவர் விசாரணை கைதியாக உள்ளது அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவிலுள்ள சிறைச்சாலைகள் கொள்ளளவைவிட அதிகமான கைதிகளை கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்திய அறிக்கையின் மூலம் தெரிவந்துள்ளது. தேசியக் குற்ற ஆவணம் மையம் ‘prison statistics india 2016 ’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது இரண்டு வருட பழைய அறிக்கை என்றாலும் அதனை தற்போது தான் இந்த ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
அதன்படி இந்திய சிறைச்சாலையில் இருப்பவர்களில் 3 பேரில் இருவர் விசாரணை கைதியாகதான் இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் 1942 தாய்மார்கள் தங்களின் குழந்தைளுடன் சிறை கைதிகளாகவும் விசாரணை கைதிகளாகவும் உள்ளனர். இந்த அறிக்கை மொத்தமாக 4,33,003 பேர் சிறைச்சாலையில் உள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் சிறையிலுள்ள 2,93,058 விசாரணை கைதிகளில் 11,834 பேர் 3 முதல் 5 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அதேபோல 3,927 பேர் விசாரணை கைதிகளாக 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கிறார்கள். அத்துடன் 1,649 பெண் கைதிகள் சிறையில் தங்களின் குழந்தைகளுடன் வசித்துவருகின்றனர்.
மேலும் 1,409 குழந்தைகளை சிறையிலுள்ள பெண் கைதிகள் பராமரித்து வருகின்றனர். இவர்களில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தையை பராமரித்து வருவது தெரியவந்துள்ளது. விசாரணை கைதிகளின் எண்ணிக்கை கடந்த காலங்களைவிட 3.6% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.