இந்தியா

மும்பையில் 2 செவிலியர்களுக்கு கொரோனா சோதனை: மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அனுமதி மறுப்பு

மும்பையில் 2 செவிலியர்களுக்கு கொரோனா சோதனை: மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அனுமதி மறுப்பு

webteam

மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2 செவிலியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தாதரில் உள்ள சுஷ்ருஷா மருத்துவமனையின் 27 வயது மற்றும் 42 வயது மதிக்கத்தக்க இரண்டு செவிலியர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஆகவே அதைத் தொடர்ந்து இந்த மருத்துவமனைக்கு புதிய நோயாளிகள் வருவதற்கான அனுமதியை நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பிரிஹன்மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) மருத்துவமனையில் பணிபுரியும் கிட்டத்தட்ட 28 செவிலியர்களை உடனே தனிமைப்படுத்துமாறு அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்தைக் கேட்டு கொண்டுள்ளனர்.

தற்போது இங்கு சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளையும் சரியாகப் பரிசோதித்த பின்னரே வெளியேற்ற வேண்டும் என்று அரசு தரப்பு கூறியுள்ளது. மேலும் 48 மணி நேரம் இந்தப் பணிகளுக்காக மருத்துவமனைக்குக் கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜி நார்த் வார்டின், தாதர் உதவி நகராட்சி ஆணையர் கிரண் திகாவ்கர் பேசுகையில், "அனைத்து செவிலியர்களையும் தங்களது சொந்த செலவிலேயே பரிசோதனைகள் செய்ய மருத்துவமனைக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

இதனிடையே, தாதரில் உள்ள என்.சி கெல்கர் சாலையில் 83 வயதான ஒரு நபர் கொரோனா சோதனை செய்து கொண்டுள்ளார். அவரது பயண பின்புலத்தை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். அவர் மூலம் ஏதாவது தொற்று பரவி இருக்குமோ ஆராய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை ஆறு கொரோனா நோயாளிகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை தாதரில் மட்டும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.