இந்தியா

கிரகப்பிரவேச வீட்டில் கோயில் யானை தாக்கி 2 பேர் பலி

கிரகப்பிரவேச வீட்டில் கோயில் யானை தாக்கி 2 பேர் பலி

webteam

வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு அழைத்து வரப்பட்ட கோயில் யானை தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

கேரள மாநிலம் குருவாயூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஷைஜூ. இவர் அருகில் உள்ள கோட்டப்பாடியில் புதிய வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டுக்கு நேற்று கிரகப்பிரவேசத்தை நடத்தினார். வீட்டுக்கு அருகில் உள்ள செம்பலகுலங்கரா கோயில் விழாவும் நேற்று நடந்தது. இந்த விழாவுக்காக, ’தெச்சிகோட்டுக்காவு ராமச்சந்திரன்’ என்ற கோயில் யானையை அழைத்து வந்திருந்தனர்.

கோயிலுக்கு வந்த யானையை தனது புதிய வீட்டுக்கும் அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தார் ஷைஜூ. ஆசியாவிலேயே, இரண்டாவது மிக உயரமான இந்த யானை கேரளாவில் புகழ்ப் பெற்றது. ஒற்றைக் கண் யானையான இது சில நேரங்களில் மிரட்டலாகவும் நடந்துகொள்ளும்.

இந்த யானை நேற்று கிரகப்பிரவேச வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட போது, பட்டாசு வெடித்ததாகத் தெரிகிறது. இதனால் திடீரென்று யானை மிரண்டு ஓடியது. இதைக் கண்ட விருந்தினர்கள் அங்கும் இங்கும் தலைதெறிக்க ஓடினர். இதில் யானை தாக்கி கன்னூரைச் சேர்ந்த நாராயண பத்தேரி (66), முருகன் (60) ஆகியோர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அங்கு வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கிரகப்பிரவேச வீட்டில் யானை தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.