இந்தியா

டிராபிக்கை நிறுத்தி நடுரோட்டில் ரவுடி கும்பல் துப்பாக்கிச் சண்டை!

டிராபிக்கை நிறுத்தி நடுரோட்டில் ரவுடி கும்பல் துப்பாக்கிச் சண்டை!

webteam

டெல்லியில், பரபரப்பான சாலையில் டிராபிக்கை நிறுத்தி, ரவுடிகள் கும்பல் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதில் 2 ரவுடிகள் உயிரிழந்தனர். 

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ளது நஜாஃப்கர் சாலை. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் நேற்று கருப்பு நிற கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் நான்கைந்து பேர் இருந்தனர். வெள்ளை நிற கார் முன்னே சென்று கொண்டிருந்தது. அந்த காரை, கருப்பு கார், விரட்டிச் சென்றது. இதனால் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சினிமாவில் வருவது போல கார்கள், சர் சர்ரென வளைந்து நெளிந்து சென்றதைக் கண்ட அவர்கள், ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்து தங்கள் வாகனங்களை, பயத்துடன் ஓட்டினர்.  

இந்நிலையில் துவாரகா மெட்ரோ ரயில் பாலத்துக்கு கீழே சென்றபோது, விரட்டிச் சென்ற கருப்பு கார், வெள்ளைக் காரை மறித்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மூன்று பேர், மற்ற வாகனங்களை அப்படியே சாலையில் நிற்க சொல்லிவிட்டு, வெள்ளை காரில் இருந்தவரை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். பதிலுக்கு அவரும் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிக் குண்டுகள் சர்சர்ரென பாய்வதையும் அந்தச் சத்தத்தையும் கண்ட, அந்தப் பகுதியினர், அலறி அடித்து ஓடினர். 

இதுபற்றி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வந்த போலீஸ்காரர் ஒருவர், ரவுடி கும்பலை நோக்கிச் சுட்டார். அந்த கும்ப லில் இருந்த ஒரு ரவுடி போலீசை நோக்கிச் சுட்டதால், அவர் மீண்டும் சில முறை அவர்களை நோக்கி சுட்டார்.  இதில் ஒரு ரவுடி உயிரிழந்தார். இதையடுத்து அந்த ரவுடி கும்பல் தப்பியோடிவிட்டது. வெள்ளை காரில் இருந்தவரும் காரில் சாய்ந்தபடியே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்திருந் தார். அவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, ‘’வெள்ளை காரில் சென்றவன் பிரவீன் கெலாட். இவன் மீது கொலை, கொள்ளை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியே வந்திருந்தான். போலீசாரால் சுடப்பட்டவன் விகாஸ் தலால். இவன், ஹரியானா போலீசிடம் இருந்து தப்பி, கோவாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்தான். இவனைப் பிடிப்பதற்கு பரிசு அறிவிக்கப்பட்டி ருந்தது. 

கொல்லப்பட்ட பிரவீனும் தலாலும் ஒரு காலத்தில், மஞ்சீத் மஹல் என்ற தாதாவிடம் இருந்தவர்கள். மஹல், இப்போது சிறையில் இருக்கி றான். ஹரியானாவில் ஒரு இடத்துக்கான கட்டப்பஞ்சாயத்து பிரச்னையில் பிரவீனுக்கும் தலாலுக்கும் மோதல் ஏற்பட்டது. நண்பர்கள் எதிரி களாயினர். இருவரும் ஒருவரையொருவர் கொல்ல நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் டெல்லியில், பிரவீன் தனியாகச் சுற்றி வருவது தலாலுக்குத் தெரிய வந்தது. கோவாவில் இருந்து பிரவீனை போட்டுத்தள்ளுவதற்காக டெல்லி வந்தான் தலால். பிறகு நடந்ததுதான் இந்த மோதல். இதில் இரண்டு பேருமே கொல்லப்பட்டுவிட்டனர்’ என்றனர்.
 
சமீபகாலமாக டெல்லியில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நடுரோட்டில் துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அடிக்கடி நடப்பதால் அப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.