இந்தியா

"தவறாக ஆக்சிலேட்டரை மிதித்துவிட்டேன்" - பாஜக எம்எல்ஏ ஸ்டிக்கர் ஓட்டிய கார் மோதி இருவர் பலி

Sinekadhara

பெங்களூருவில் பிஸியான சாலையில் கட்டுப்பாட்டை இழந்த SUV கார் அடுத்தடுத்த வாகனங்கள்மீது மோதியதில் இருவர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

திங்கட்கிழமை பெங்களூருவின் பிரதான சாலையில் பாஜக எம்.எல்.ஏ ஹர்டலு ஹலப்பா ஸ்டிக்கர் ஒட்டிய காரானது சிக்னலில் நின்றிருந்த இருசக்கர வாகனங்கள்மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் மோகன்(48) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த கார் பாஜக எம்.எல்.ஏ ஹர்டலு ஹலப்பாவுக்கு சொந்தமானது இல்லை என தெரியவந்துள்ளது. அந்த கார் வனத்துறை அதிகாரி ராமு சுரேஷுக்கு சொந்தமானது என்று கூறியுள்ளார் ஓட்டுநர் மோகன். ஹலப்பாவின் மகளுடைய மாமனார் இவர். மருத்துவம் பயின்றுவரும் ஹலப்பாவின் மகள் சுஷ்மிதா ஹலப்பா கிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதாகவும், அவரை அழைத்துவர சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிக்னலில் காரை நிறுத்த ப்ரேக்கை அழுத்துவதற்கு பதிலாக தவறுதலாக ஆக்சிலேட்டரை மிதித்துவிட்டதால் முன்னால் நின்ற வாகனங்கள்மீது மோதிவிட்டதாகவும் கூறியுள்ளார். அருகில் நின்றிருந்த இரண்டு ஸ்கூட்டர்களில் பயணித்த மஜீத் மற்றும் அய்யப்பா ஆகியோர்மீது கார் ஏறியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.