மேகாலயாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 15 பேரில் நிலைமை என்ன ஆனது என்று தெரியாத நிலையில், மேலும் ஒரு சுரங்க விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேகாலயாவில் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தின் சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்துக்குள், அருகில் உள்ள லைத்தின் ஆற்றில் இருந்து கடந்த 13 ஆம் தேதி தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களில் 15 பேர் அதற்குள் சிக்கினர்.
தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு படை, கடற்படை வீரர்கள் முகாமிட்டு அவர்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீரை வெளியேற்ற முடியாமல் மீட்பு படையினர் தவித்து வருகின்றனர். 25 நாட்கள் ஆகியும் அவர்களின் நிலை என்னவானது என்று தெரியவில்லை.
இதற்கிடையே கிழக்கு ஜைன்டியாவில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள ஜலியா கிராமத்தில் சட்டவிரோத சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரக்கத்துக்கு வேலை பார்க்கச் சென்ற இலாட் பரேக் (26), மோனோஜ் பசுமத்ரி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பாறைகள் விழுந்து இவர்கள் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகவலை மாவட்ட போலீஸ் அதிகாரி சில்வஸ்டர் தெரிவித்துள்ளார்.
‘’நிலக்கரி வெட்டி எடுக்க முயன்றபோது பாறைகள் சரிந்து உயிரிழந்துள்ளனர். இந்த சட்டவிரோத சுரங்கத்தை நடத்தியவரை தேடி வருகிறோ ம்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.