இந்தியா

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை - 151 மேற்பட்ட நதிகளில் தண்ணீர் எடுத்து வந்த சகோதரர்கள்

webteam


அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 151 மேற்பட்ட நதிகளில் இருந்து வயதான சகோதரர்கள் இருவர் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு பிரதமர் மோடி மற்றும் பாஜக முக்கிய பிரமுகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி வந்திறங்குவதற்கு ஏதுவாக பூமி பூஜை நடைபெறும் இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ஹெலிப்பேடு அமைக்கப்பட்டுள்ளது.


இது மட்டுமன்றி மிகப் பெரிய அளவிலான சிசிடிவி திரைகள், வண்ண ஓவியங்கள் உள்ளிட்டவையால் அயோத்தி சாலைகள் அலங்கரிங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பூமி பூஜைக்கு வயதான சகோதரர்கள் இருவர் 150 க்கும் மேற்பட்ட ஆறுகளிலிருந்து தண்ணீரைச் சேகரித்து எடுத்து வந்துள்ளனர்.

இது குறித்து ஏ.என்.ஐ நிறுவனத்தினரிடம் ஷியாம் பாண்டே கூறும் போது “ 1968 ஆம் ஆண்டு முதல் இதனை நாங்கள் சேகரித்து வருகிறோம். 151 ஆறுகள், 8 பெரிய நதிகள், மூன்று கடல்கள் ஆகியவற்றிலிருந்து நீரும், இலங்கையில் உள்ள 16 இடங்களில் உள்ள மணலையும் எடுத்து வந்திருக்கிறோம் “ என்று கூறினார்.


முன்னாதாக கோயிலின் தலைமை குருவின் உதவியாளரான பிரதீப் தாஸ் மற்றும் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 14 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும், விழா திட்டமிட்டப்படி நடக்கும் என கோயில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.