ஒன்பது மணிநேரம் காருக்குள் சிக்கிக்கொண்ட 2 சிறுவர்கள், மூச்சுத்திணறல் காரணமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ளது தாஸ் கார்டன். இந்தப் பகுதியை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் நேற்று வீட்டுக்குத் திரும்பினார். வீட்டின் வெளியே கொஞ்சம் தள்ளி காரை பார்க் செய்து, ஏசியை அணைத்துவிட்டு சாப்பிடச் சென்றார். நன்றாக வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. அங்கு விளையாடிக்கொண்டிருந்த நான்கு மற்றும் ஆறு வயதைக் கொண்ட இரண்டு சிறுவர்கள் கார் கதவு திறந்திருப்பதை பார்த்ததும் ஏறினர். ஏசி காற்று குளிர்ச்சியாக இருந்தது. பின்னர் பின் சீட்டில் அமர்ந்து தூங்கிவிட்டனர். இந்நிலையில் வீட்டுக்குச் சென்ற டிரைவருக்கு சிறிது நேரம் கழித்து கார் கதவை லாக் பண்ணாதது தெரியவந்தது. வீட்டின் வெளியே நின்றே, கார் கண்ணாடியை ரிமோட்டால் லாக் செய்தார். பின்னர் தூங்கிவிட்டார்.
இந்நிலையில் அந்தக் குழந்தைகளின் பெற்றோர் பிள்ளைகளை காணாமல் தேடினர். பல மணி நேரத்துக்குப் பிறகு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். போலீசார் கடத்தல் வழக்காக இதை பதிவு செய்தனர்.
பின்னர் குழந்தைகளின் புகைப்படங்களை கேட்டனர். அதை ஸ்டேஷனில் கொண்டு போய் கொடுக்க நினைத்த அந்தப் பிள்ளைகளின் பெற்றோர், காரில் செல்லலாம் என முடிவு செய்து, வீட்டருகே நின்ற காரை பார்த்தனர். அப்போதுதான் இரண்டு சிறுவர்களும் அதற்குள் மயங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கதவை திறந்து குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 9 மணிநேரம் அவர்கள் காருக்குள் இருந்துள்ளனர். மூச்சுத் திணறல் காரணமாக அவர்கள் இறந்திருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.