கைது புதியதலைமுறை
இந்தியா

பஞ்சாப் | இந்திய ராணுவம் பற்றிய தகவல்.. பாகிஸ்தானுக்கு கசிய விட்ட இருவர் கைது!

இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்குக் கசியவிட்டதாக இரண்டு பேர் பஞ்சாப் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், அமிர்தசரஸில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் பகுதிகள் மற்றும் விமானப்படை தளங்களின் முக்கியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை கசியவிட்டதாக இரண்டு பேரை, பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் இருவரும் பாலக் ஷெர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அமிர்தசரஸ் கிராமப்புற காவல் துறையினரால் நடத்தப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க எதிர்-உளவு நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், அமிர்தசரஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹர்ப்ரீத் சிங் என்ற பிட்டு மற்றும் ஹேப்பி என்ற புனைப்பெயர் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறை செயல்பாட்டாளர்களுடனான அவர்களின் தொடர்புகள் தெரியவந்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை தீவிரமடையும்போது மேலும் முக்கியமான தகவல்கள் வெளியாகும் " என்று காவல்துறை இயக்குநர் கௌரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.