இந்தியா

இரண்டாவது முறையாக மீண்டும் திறக்கப்பட்டது இடுக்கி அணை

இரண்டாவது முறையாக மீண்டும் திறக்கப்பட்டது இடுக்கி அணை

webteam

இடுக்கி மாவட்டத்தில் அதிகனமழை  ‘ரெட் அலர்ட்’ முன்னறிவிப்பை தொடர்ந்து இன்று இடுக்கி அணை திறக்கப்பட்டது.

கேரளாவில் வரும் 8ம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் ஏழாம் தேதியான நாளை அதி கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்திருந்தது. இதையடுத்து இடுக்கி மாவட்டத்திற்கு முன்னெச்சரிக்கையாக ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் கேரளாவின் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடுக்கி அணை இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மதகு உள்ள செறுதோணி அணையில் இருந்து ஒரு மதகு திறக்கப்பட்டு முதற்கட்டமாக விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டமும் 132 அடியை தாண்டி உயர்ந்து வருகிறது.

கடந்த இரண்டு மாதம் முன் கன மழை பெய்தபோது அணை நீர்மட்டம் 26 ஆண்டுகளுக்குப்பின் 2,401 அடியை தாண்டியது. அப்போது இடுக்கி அணை கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி 26 ஆண்டுகளுக்குப்பின் முதன்முதலாக திறக்கப்பட்டது. அணை நீர்மட்டத்தை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு அணை நீர் வெளியேற்றும் செறுதோணி அணையின் ஐந்து மதகுகள் அப்போது படிப்படியாக திறக்கப்பட்டன. அதிகபட்சமாக அன்றைக்கு அணையிலிருந்து விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறியது. அதன்பின் மழை குறைந்ததால் அணைக்கான நீர்வரத்தும் குறைந்தது. ஆகவே கடந்த செப்டம்பர் 7ம் தேதி இடுக்கி அணை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.