2025 மத்திய பட்ஜெட் அறிக்கை வெளியானபோதே, கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான நிதிபலன்களை பிகார் பெற்றது. “இது இந்தியாவுக்கான பட்ஜெட்டா; பிகாருக்கான பட்ஜெட்டா?” என்று பலரும் அப்போதே வியந்தது நினைவில் இருக்கலாம். அதற்கு பிறகும் அடுத்தடுத்த அறிவிப்புகளால் பிகார் மக்களை திணறடித்து வருகிறது மோடி அரசு. இந்த அதிரடிகளின் தொடர்ச்சியாகத்தான் தர்பங்கா – மதர் இடையேயான அம்ரித் பாரத் ரயிலை அறிவித்திருக்கிறது இந்திய ரயில்வே.
பிகார், ராஜஸ்தான் இடையேயான இந்த ரயிலுடன் சேர்த்து, பிகாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அம்ரித் பாரத் ரயில்களின் எண்ணிக்கை 11 ஆகிறது. இதையன்றி, புதிதாக வந்தே பாரத் ரயில்களும் பிகாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தி பேசும் 10 மாநிலங்களில் உத்தர பிரதேசத்துக்கு அடுத்து பெரிய மாநிலமான பிகாரை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் கையிலேயே தக்கவைப்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். பிகாருக்கு இதுவரை 50 முறை மோடி வந்திருப்பது அவர் பிகார் மீது கொண்டுள்ள அக்கறைக்கான வெளிப்பாடு என்று பிகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சாம்ராட் சௌத்ரி சமீபத்தில் கூறியிருந்தார்.
தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதால், நிதிஷ் குமார் ஆட்சி மீது அதிருப்தி நிலவுகிறது. அதைக் களைவதில் பிரதமர் மோடி குறியாக இருக்கிறார். மூன்றாவது முறை பிரதமராகப் பொறுப்பேற்ற இந்த 15 மாதங்களில் மட்டும் 7 முறை பிகாருக்கு அவர் வந்து சென்றிருக்கிறார். ஒவ்வொரு முறை பிகார் வந்து செல்லும்போதும் பல நலத்திட்டங்கள் பிகாரை வந்தடைவதால், மோடியின் வருகையை மிகுந்த உற்சாகத்தோடு பார்க்கிறார்கள் பிரிகள்!